அமெரிக்காவின் மாகாணமொன்றில் இந்து மதத்துக்கு கிடைத்த கௌரவம்

அமெரிக்காவின் மாகாணமொன்றில் இந்து மதத்துக்கு கிடைத்த கௌரவம்-USA-North Carolina-Hindu Month

- இந்து பாரம்பரிய மாதமாக ஒக்டோபர் பிரகடனம்

ஒக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்து மதம் பரவியுள்ளது. சதவீத அடிப்படையில் இந்து மத மக்கள் அதிகம் உள்ள நாடாக நேபாளம் உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா, மொரிசீயஸ் நாடுகள் உள்ளதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் காண முடிகிறது. சுமார் 100 கோடி இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பர், ஒக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், இந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும். உலகளவில் இந்து மதத்தில் நூறு கோடி பக்தர்களும், அமெரிக்காவில் மட்டும் 40 இலட்சம் பக்தர்களும் உள்ளனர்.

இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் இந்து மதத்தின் போதனைகளைப் பார்க்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தையும் சிந்தனையையும் தருகிறது.

எங்களுடைய துடிப்பான இந்து அமெரிக்க சமூகம், வடக்கு கரோலினா மாகாண குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள இந்து சமூகம், இந்து மதத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாடும். இதன் மூலம் நடப்பு ஒக்டோபர் மாதத்தை, வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்து பாரம்பரிய மாதமாக' அனைத்து குடிமக்களும் பின்பற்றுமாறு அறிவிக்கிறேன். இவ்வாறு கவர்னர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.

Tue, 10/12/2021 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை