தாய்வான் பற்றி சீனா அமெரிக்கா இணக்கம்

‘தாய்வான் ஒப்பந்தத்தை’ கடைப்பிடிப்பதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் உடன் இணக்கம் எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒரு சீனா’ கொள்கையின் கீழ் தாய்வானை அன்றி சீனாவை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாட்டை பைடன் இதன்போது குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையின்படி தாய்வானுடன் ‘வலுவான உத்தியோகபூர்வமற்ற’ உறவு ஒன்றை பேணுவதற்கு அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தாய்வானின் எதிர்காலம் அமைதியாக இருப்பதைத் தீர்மானிக்க உடன்பாட்டை ஏற்று நடப்பது முக்கியம் என்று பைடன் வலியுறுத்தினார்.

தாய்வான் மற்றும் சீனாவுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலால் சீன போர் விமானங்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக ஊடுருவி வருவதாக தாய்வான் குற்றம்சாட்டுகிறது.

‘தாய்வான் பற்றி ஷி (ஜின்பின்) உடன் நான் பேசினேன். தாய்வான் உடன்படிக்கையை கடைப்பிடிக்க நாம் இணங்கினோம்’ என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சீனா கொள்கையின்படி தாய்வான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும் ஒருநாள் அந்தப் பகுதி சீனாவுடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாய்வான் தம்மை ஒரு இறைமை கொண்ட நாடாகக் கருதுகிறது.

இதற்கிடையே, சீனாவுடனான உறவு நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமடைந்திருப்பதாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்வானை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆற்றலை 2025 க்குள் சீனா பெற்றுவிடும் என்று தாய்வான் எச்சரித்தது.

Thu, 10/07/2021 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை