பால்மா இன்று முதல் புதிய விலைகளில் சந்தைகளில்

சமையல் எரிவாயு, சீமெந்து, கோதுமை மா விலைகள் தொடர்பில் இன்று தீர்மானம்

 

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பால் மாவை இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு விட முடியுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பால் மா தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஷ்மன் வீரசூரிய:

புதிய விலைகளின்படி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு கிலோ பால் மாவின் விலை 1195 ரூபாவாகவும் அதேவேளை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள 400 கிராம் பால் மா பக்கற் 480 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.

அதேவேளை தேசிய உற்பத்தியான பால் மாவின் விலைகளையும் அதிகரிக்கப் போவதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்துச் செல்வதையடுத்து தேசிய உற்பத்தியான பால் மாவிலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசேகர தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை இன்று தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளதையடுத்து சீமெந்து ஒரு கிலோவின் விலையை 97 ரூபாவாலும் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை 10 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் சமையல் எரிவாயு தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கடந்த அமைச்சரவையின்போது பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனையடுத்து அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவினால் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை