கொரோனாவை குறைத்து மதிப்பிட்ட பிரேசில் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

செனட் விசாரணையில் அறிக்கை

பிரேசிலில் கொவிட்-19 பெருந்தொற்றை கையண்டது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று பிரதான விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.

ஆறு மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து வெளியாகி இருக்கும் அறிக்கையில் அரசின் ஊழல்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசிலில் 600,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி பொல்சொனாரோ தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல், ஆவண மோசடி மற்றும் வன்முறையைத் தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.

எனினும் 1,200 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மீது செனட் ஆணைக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது.

எனவே இது நிராகரிக்கப்பட மற்றும் மாற்றப்பட வாய்ப்பு உள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது உறுதியற்ற ஒன்றாக உள்ளது.

எனினும் செனட்டால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையை நிராகரித்திருக்கும் ஜனாதிபதி இது அரசியல் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பொது முடக்கம், முகக்கவசம் அணிவது மற்றும் தடுப்பு மருந்து பெறுவதற்கு எதிராக பொல்சொனாரோ தொடர்ந்து கருத்துக் கூறி வந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் பிரேசிலில் கொரோனா தொற்றினால் சாதனை அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள், கொரோனா பற்றி புலம்புவதை பிரேசிலியர்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்தப் பெருந்தொற்று காரணமாக பொல்சொனாரோவின் செல்வாக்கு நாட்டில் கணிசமாக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் இரண்டாவது தவணைக்கு போட்டியிட விரும்பினால் அது அவருக்கு கடினமானதாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா தொற்றினால் உலகில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த நாடாக பிரேசில் உள்ளது.

Thu, 10/21/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை