சொந்த சமூகதளத்தை ஆரம்பிக்கிறார் ட்ரம்ப்; அடுத்த மாதம் வெளியீடு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘ட்ரூத் சோசியல்’ என்ற தனது சொந்த சமூகத் தளம் ஒன்றை வெளியிடவுள்ளார். அதன் முதல் பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அதைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ட்ரம்ப் இணையவழிப் பொழுதுபோக்குச் சேவைகளையும் அறிமுகம் செய்யவுள்ளார். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக ட்ரூத் சோசியல் தளத்தை உருவாக்கியதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ் சாதனங்களில் இதற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்துடன் சேர்ந்த நெட்பிளிக்ஸ், ஹொட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி நிறுவனம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி, அமெரிக்காவின் பாராளுமன்றத்திற்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, ட்விட்டர், பேஸ்புக், யூடியுப் ஆகிய சமூகத் தளங்களிலிருந்து அவர் தடை செய்யப்பட்டார்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரது சமூகதள பதிவுகள் அவதூறு, ஆத்திரமூட்டுவது மற்றும் வெளிப்படையாக பொய்களைக் கூறுவதான குற்றச்சாட்டு அதிகமாக இருந்தது. இதனால் அவருக்கு தடை விதிக்க சமூகதளங்களுக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அவரது பதிவுகள் சிலதை நீக்க அல்லது தவறான தகவல் என்று அடையாளம் இடுவதற்கு பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. சாதாரண காய்ச்சலை விடவும் கொவிட் ஆபத்துக் குறைந்தது என்று கூறிய அவரது பதிவும் இதில் அடங்கும்.

Fri, 10/22/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை