துனீஷியாவில் முதலாவது பெண் பிரதமர் நியமனம்

துனீஷிய ஜனாதிபதி கயிஸ் சயிட், பிரதமரை பதவி விலக்கி கிட்டத்தட்ட அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி இரண்டு மாதங்களின் பின் பெண் புவியியலாளர் ஒருவரை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

இதன்படி துனீஷியாவின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீலா பவுடன் ரொம்தானே, உடன் அரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி ஆணைகள் மூலம் நாட்டை தாம் ஆள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்தார்.

அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் அதிருப்தியில் இருக்கும் மக்களிடையே ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றது. எனினும் புதிய அரசு ஒன்றை அமைக்கும்படி ஜனாதிபதி மீது அண்மைக் காலத்தில் அழுத்தம் அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சயிட்டின் அதே வயதான 63 வயதுடைய ரொம்தானே துனீஷிய உயர் கல்வி அமைச்சின் உயர் பதவியை வகித்தவராவார்.

துனீஷியாவில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஜனநாயக செயற்பாடுகள் ஜனாதிபதியின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பற்றியும் பெரும் கேள்வி உள்ளது.

Fri, 10/01/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை