கட்டுநாயக்க விமான நிலையம் அடுத்த ஏப்ரலுக்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்

இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானப் பயணிகள் அங்கிருந்து 20 வினாடிகளில் வெளியேறும் வகையில் விசேட ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் அந்த புதிய செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், விமான நிலையத்திற்கு வருகைதரும் விமானப் பயணிகள் அங்கு கடதாசி அல்லது வேறு உபகரணங்களை உபயோகப்படுத்தாமல் ஒன்லைன் முறைமை மூலம் தமது ஆவணங்களை சமர்ப்பிக்கவும் சுகாதார சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் புதிய முறைமை மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுநாயக்க விமானநிலையம் முழுமையான டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்கு சுங்கம் மற்றும் குடிவரவு குடியகல்வு அலுவலகத்தில் தமது ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் சுகாதார அதிகாரிகளை சந்தித்து உரிய அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் விமானப் பயணிகள் மேலதிகமாக 2 நிமிடங்களை அங்கு செலவிட வேண்டியுள்ளது.

அதனை தவிர்த்துக் கொள்ளும் வகையில் பயணிகளின் நலன் கருதி 20 வினாடிகளில் அவர்கள் ஒன்லைன் மூலம் அவற்றை சமர்ப்பிப்பதற்கு புதிய முறைமை மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க இலங்கைக்கு வரும் விமானப் பயணிகள் உரிய நாட்டில் இருந்தோ அல்லது விமானத்தில் வைத்தோ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னரோ       www.airport.lk என்ற இணையத்தள முகவரி மூலம் www. airport.lk/health - declaration/index மூலம் தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.  அதற்கிணங்க தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டை மற்றும் இலங்கைக்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை ஆகியவற்றை மேற்படி முறைமை மூலம் சமர்ப்பிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 10/30/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை