நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதிய உபாயங்கள் அவசியம்

ஜனாதிபதியின் நோக்கு குறித்து செயலாளர் பீ.பி.ஜயசுந்தர விளக்கம்

 

ஐந்து வருட பதவியை தக்க வைப்பதிலும் பார்க்க மக்களுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு நாளையே வீட்டுக்கு செல்வதே ஜனாதிபதியின் நோக்கு  என்கிறார் செயலாளர்

நாட்டுக்கும் மக்களுக்கும் தவறிழைத்து ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருப்பதைவிட மக்களுக்கு தேவையானதை செய்துவிட்டு நாளை வீட்டுக்கு செல்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் நோக்கமென ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, ஆட்சியைப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த தயாரான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையில் அடங்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தபோது  கொரோனா வைரஸ் பாதிப்பு அதற்கான இலக்குகளை மாற்றிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே அவசரத் திட்டமாக அமைந்துவிட்டது.

கொரோனா வைரஸ் முதலாவது அலை எமக்கு புதிய அனுபவங்களை வழங்கியுள்ள அதேவேளை, அதன் பின்னரான இரண்டாவது அலை நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாரிய வீழ்ச்சிக் குள்ளாக்கிவிட்டது.

கொரோனா வைரஸ் முதலாவது பாதிப்புக்கு முன்னரே அதன் கட்டுப்படுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணி ஒன்றை உருவாக்கி ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சாத்தியமாக அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

அதன் பின்னரான கொரோனா வைரஸ் அலைகளை எதிர்கொண்டபோது பாரிய தடைகள், பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன் அதிலிருந்து மீண்டு முன்னோக்கிச் செல்வதற்கு புதிய உபாயங்கள், வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பல்வேறு குறைபாடுகள் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் தற்போது தடுப்பூசி வழங்கலில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

அரசாங்கம் தடுப்பூசி நடவடிக்கைகளுக்காக 650 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புதிய உபாயங்கள் வழிமுறைகளை இனங்கண்டு அதனூடாக பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் பேசுவதைக் குறைத்துக் கொண்டு செயற்படுவதில் நாட்டம் காட்ட வேண்டியுள்ளது.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கத்தின் கருத்து ஒன்றாகவே இருக்க வேண்டும். அந்த வெளிப்பாட்டை ஒருவரே வெளிப்படுத்தவேண்டும். எனினும் இலங்கையில் பெரும்பாலோனோர் பேசுகின்றனர். அதில் குறைவாக பேசுபவர் ஜனாதிபதியே.

அவர் அதிகம் பேசாவிட்டாலும் அதிகமாக வேலை செய்பவர். அவர் தேவையான நேரத்தில் இலக்கை நோக்கி பயணிப்பவரென்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

 

Wed, 10/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை