ஆறு மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாட்டில் 50 வீதமான பாடசாலைகள் திறப்பு

மாணவர்களது கல்வியில் அக்கறை செலுத்துமாறு பெற்றோரிடம் கல்வியமைச்சர் தினேஷ் கோரிக்கை

வடக்கு கிழக்கில் அதிக  ஆசிரியர், மாணவர்கள்  வருகை பதிவானது

 

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை நேற்று திறக்க முடிந்துள்ளதுடன் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் 50 வீதமான பாடசாலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை நேற்று எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் கபில பெரேரா தெரிவித்தார்.

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் நேற்று (21) தொடங்கியது . மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 16% மற்றும் 30% ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தில் மாணவர்களின் வருகை 7% க்கும் குறைவாகவும், ஆசிரியர்களின் வருகை 17% ஆகவும் இருந்தது என்று குறிப்பிட்ட அவர் வடக்கு மாகாணத்தில் 21% மாணவர்கள் மற்றும் 45% முதல் 52% ஆசிரியர்கள் வருகை பதிவாகியிருந்ததாகவும் கிழக்கு மாகாணத்தில் 39% மாணவர்கள் மற்றும் 45% ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர் எனவும் கூறினார். மொத்தமாக, கொழும்பை விட ஏனைய மாகாணங்களில் உள்ள மாணவர்களின் வருகை சிறப்பாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

எதிர்வரும் வாரங்களில் படிப்படியாக நாடளாவிய ரீதியிலான ஏனைய பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன, மாணவர்களது கல்வியில் அக்கறை செலுத்துமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த வருடம் முதல் படிப்படியாக தமக்கான கல்வியை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால் நேற்றைய தினம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.

பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தாம் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார்.

தமது சங்கமானது தொடர்ச்சியாக பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தாம் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் அதேவேளை அதற்காக தாம் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

Fri, 10/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை