திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்த அனுமதி!

சுகாதார அமைச்சினால் நாளைய தினம் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதன்மூலம் இதுவரை நடை முறையிலிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நாளை 16 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தளர்த்தப் பட்டுள்ளன. அதற்கிணங்க திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள், சிற்றுண்டிச் சாலைகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படுதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ள நிலையில் மேற்படி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க திருமண வைபவங்களில் மண்டபத்தில் உள்ளடக்கக் கூடிய நூற்றுக்கு 25 வீதமானோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த எண்ணிக்கை 50 நபர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திருமண வைபவங்களில் மதுபான உபசாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த முதலாம் திகதி முதல் பதிவுத் திருமணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மரண நிகழ்வுகளில் ஒரு தடவையில் 15 பேர் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில விளையாட்டுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் சிற்றுண்டிச் சாலைகளில் ஆசனங்களின் கொள்ளளவுக்கு அமைய 30 வீதம் நபர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அங்கு மதுபான உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றில் மண்டபத்தின் கொள்ளளவுக்கு ஏற்ப 25 வீதமானோர் அனுமதிக்கப்படுவார்கள். உச்சளவாக 50 நபர்கள் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண வைபவங்கள் நடத்தப்படும்போது சுகாதார வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு களை மேற்கொள்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை