ஒலுவில் மீன்பிடி துறைமுகம் விரைவில் மீள திறக்கப்படும்

கல்முனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

அம்பாறை  மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்காக கடற்றொழில்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை  (27) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். இங்கு உரையாற்றும் போதே ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை அங்கு வாழும் மக்களுக்கு பிரச்சினை இல்லாத வகையில் விரைவில் மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்  உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இங்குள்ள மீனவ அமைப்புகள், சங்கங்கள், மீனவர்கள் என பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றீர்கள்.

உங்களுடைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்.  வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மீன்பிடித்துறை அமைச்சு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நான் நடவடிக்கை எடுப்பேன்.
ஒலுவில் பிரதேசத்தை பொறுத்தளவில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் எனக்கூறி னாலும், மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுவதால் கடல் அரிப்பு ஏற்படுகிறது என அங்கிருக்கின்ற மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே இருதரப்பினருக்கும் பாதிப்பில்லாத வகையில் அவர்களுக்கான மாற்று நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அங்கு வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத வகையில் விரைவில் மீன்பிடித் துறைமுகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இக் கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட காரியாலய உதவி பணிப்பாளர் நடராஜா சிறிரஜ்ஜன், திணைக்களத்தின் பயிற்சி மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளர் என்.ஜி.என். ஜெயக்கொடி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, கடற்படை அதிகாரிகள், கரையோரம் பேணல் திணைக்களத்தின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட ,  நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்கள்)

 

Fri, 10/29/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை