மாகாணங்களுக்கிடையில் ரயில் சேவை எப்போது?

ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் இன்று முடிவு

மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெறும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதுவரை மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவையே இடம்பெற்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்தவுடன் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கான அனுமதி கிடைத்ததும் உடனடியாகவே கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், புத்தளம், சிலாபம், ரம்புக்கனை, பெலியத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு ரயில் சேவைகளை நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே பிரவேச சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்றைய தினம் நடைபெறும் மேற்படி ஜனாதிபதி செயலணிக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை