யாழில் வாள்வெட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

ஆயரின் முறைப்பாட்டுக்கு IGP பதிலளிப்பு

வடக்கில் போதைப் பொருள் பாவனை, வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க இளையோருக்கு வேலைவாய்ப்பு இன்மையே காரணம் என பொலிஸ்மா அதிபர் தமக்கு கூறியதாக யாழ். மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் யாழ்.மறைமாவட்ட பேராயரை நேற்றுமுன்தினம் மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ்.ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்.எஸ். பியாக, டி.ஐ.ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் ஆவார். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும், யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.

இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்து என்னையும் சந்தித்துள்ளார்.அவ்வேளை இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது என என்னிடம் தெரிவித்தார்.

அவரிடம் நான், முன்னைய காலத்தில் வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு கூறி இருக்கின்றேன். அது மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும், எனவும்,குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணி நேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அதனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் என அவரிடம் கூறினேன் என தெரிவித்தார்.

Fri, 10/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை