ஊடகவியலாளர்களை விசாரிக்க அரசாங்கம் உத்தரவிடவில்லை

சாட்சியங்களை பெற CIDயினரே முயற்சித்தனர்   

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை செய்ய அரசாங்கம் ஒருபோதும் உத்தரவிடவில்லை என தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன , சாட்சியங்ளை பெறுவதற்காக சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூடு தொடர்பில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். சதொச நிறுவனத்தில் மோசடி இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வருகின்றன.ஊடகவியலாளர்களுக்கு நாம் எவ்வித அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. சிஐடியினர்தான் அவர்களை அழைத்துள்ளனர். அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியாே அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை. சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவே இதனை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாமென பிரதமரும் அறிவுறுத்தியுள்ளார். உரிய வகையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை