தமிழக மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோவிலம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். காரைநகர் கடற்பகுதியிலிருந்து நேற்று (20) காலை குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   உயிரிழந்த நபர் தமிழகத்தின், கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் - கோவிலம் கடற்பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவேளை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடி படகை சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.

அதன்போது, கடற்படையினரின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தினால் கடலில் மூழ்கிய இந்திய படகிலிருந்த மூன்று மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய நபர் காணாமல் போயிருந்தார். நீரில் மூழ்கி காணாமல்போன மீனவரை கண்டுபிடிக்க கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று (20) காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை