ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணைகள் வீசி சோதனை

வட கொரியா - ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் குறைந்தபட்சம் ஒரு பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வட கொரியா செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளன.

வட கொரியாவின் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்ததாக தென் கொரியாவின் ஒருங்கிணைந்த முதன்மை இராணுவ தளபதி தெரிவித்தார்.

தென் கொரியா, ஜப்பான், அமெரிக்க உளவுத் துறை தலைவர்கள், தென் கொரிய தலைநகரான சியோலில் இந்த வாரம் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார். மேலும் இது வருத்தத்துக்குரியது என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக வட கொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. சில ஏவுகணை பரிசோதனைகள் கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக உள்ளது.

பாலிஸ்டிக் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகளை வட கொரியா பரிசோதிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த ஏவுகணைகள் சுமார் 450 கிலோமீற்றர் பயணிப்பதோடு அதிகபட்சம் 60 கிலோமீற்றர் உயரம் வரை செல்லும் என்று நம்பப்படுகிறது என தென் கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அண்மையில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஏவுகணை சோதனைகள் பற்றி தெரிவிக்கையில், "வட கொரியா இராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் இராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானதாக உள்ளது," என தெரிவித்திருந்தார்.

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை