ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்

அமைச்சர் பந்துல குணவர்த்தன பகிரங்க அறிவிப்பு

 

வெள்ளைப்பூடு மோசடியுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறுபவர்கள் அதனை ஆதாரத்துடன் ஒப்புவித்தால் தாம் அரசியலிலிருந்தே விலகப் போவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபையில் அரசியல் ரீதியான நியமனம் பெற்றுக் கொண்டுள்ள ஒருவர் சதொச வெள்ளைப் பூடு மோசடி விவகாரத்துடன் எனக்கு சம்பந்தம் உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை எனது பொறுப்பிலுள்ள விவகாரங்கள் தவிர்ந்த வேறு எதற்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை.

அந்த விவகாரத்தில் இதுவரை எனக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களை பேலியகொடை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.சிலர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டும் உள்ளனர்.

எது எவ்வாறாயினும் வெள்ளைப்பூடு மோசடி விவகாரத்தில் சிறிதளவேனும் நான் தொடர்புபட்டுள்ளமை ஆதாரங்களுடன் ஒப்புவிக்கப்பட்டால் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் வர்த்தக அமைச்சர் பதவியில் இருந்தும் விலகுவதுடன் நிரந்தரமாக அரசியலில் இருந்து விடை பெறவும் எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை