சூடானில் இராணுவ சதிப்புரட்சியை எதிர்த்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

சூடான் ஆயுதப் படைகள் நாட்டில் இராணுவ சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்ட நிலையில் அதற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு ஆட்சி கைப்பற்றப்பட்டதை அடுத்து தலைநகர் கார்டூம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை இடைமறித்தும் கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சதிப்புரட்சித் தலைவரான ஜெனரல் அப்தல் பத்தா புர்ஹான், கடந்த திங்கட்கிழமை சிவில் அரசை கலைத்து, அரசியல் தலைவர்களை கைது செய்ததோடு நாட்டில் அவசர நிலையையும் பிரகடனம் செய்தார்.

இதற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று செவ்வாய்க்கிழமை அவசரமாகக் கூடியது.

நாட்டில் நிலவும் அரசியல் குழப்பமே இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என்று ஜெனரல் அப்தல் பத்தா புர்ஹான் நியாயம் கூறியுள்ளார். உள்ளூர் ஆர்ப்பாட்டக் குழுக்களை கைது செய்வதற்கு கார்டூமில் துருப்பினர்கள் வீடு வீடாக சோதனை செய்து வருகின்றனர்.

தலைநகரின் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதோடு சர்வதேச விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இணையதளம் மற்றும் பெரும்பாலான தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதோடு அவசர நிலை தவிர்த்து இராணுவத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணி புரிவதை மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர்.

2019 இல் நீண்டகால தலைவரான ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் சிவில் தலைவர்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையே முறுகல் நீடித்து வந்தது.

இராணுவத்தின் செயற்பாடு சூடானின் அமைதியான புரட்சிக்கு துரோகம் செய்வதாக உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். சூடானுக்கான 700 மில்லியன் உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்றுக் காலையிலும் வீதிகளிலேயே நிலைகொண்டனர். சிவில் அரசுக்கு ஆட்சிப் பொறுப்பை திரும்ப ஒப்படைக்கும்படி அவர்கள் கோரி வருகின்றனர்.

‘சிவில் அரசுக்கே மக்கள் ஆதரவு அளிப்போம்’ என்று கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் தடங்கலை ஏற்படுத்தி டயர்களை கொளுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதில் பல பெண்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த திங்கட்கிழமை துருப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும் ஆர்ப்பாட்டங்கள் தணியாமல் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ தலைமையகத்திற்கு வெளியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தனது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தாக காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் படையினர் அதிர்ச்சியூட்டும் கை குண்டுகளை வீசியதாகவும் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தாகவும் மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்தார்.

‘இருவர் கொல்லப்பட்டார்கள். அவர்களை நான் எனது கண்களால் பார்த்தேன்’ என்று மருத்துவரான அல் தயிப் முஹமது என்பவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ வளாகத்திற்கு வெளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிர்ச் சேதங்கள் பதிவானதாக தகவல்துறை அமைச்சு பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் இரத்தம் படிந்த ஆடைகளுடன் காயங்களுக்கு சிகிச்சை பெறும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

சூடான் அங்கத்துவம் பெற்றிருக்கும் ஆபிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், தற்போது அடையாளம் வெளியிடப்படாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பிரதமர் அப்தல்லா ஹம்தொக் மற்றும் அவரது மனைவியுடன் சேர்த்து அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சிவில் தலைவர்களும் உள்ளனர். சூடானின் சிவில் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையே 2019 ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த இணக்கம் ஏற்பட்டது. ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவங்கள் பதிவானது இந்த ஒப்பந்தத்தின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. இவ்வாறான ஆட்சி கவிழ்ப்பு முயற்சி ஒன்று ஒரு மாதத்திற்கு முன்னரும் இடம்பெற்றது.

அதிகாரப் பகிர்வுக் குழுவின் தலைவராக இருந்த ஜெனரல் அப்தல் பத்தா புர்ஹான், சூடானில் சிவில் ஆட்சி மாற்ற செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் 2023 ஜூலையில் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை