இரு ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பிலிப்பைன்சிலும், ரஷ்யாவிலும் ஜனநாயகத்தை காக்க வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியதற்காக பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகிய இருவரும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

‘ஜனநாயகமும், பத்திரிகை சுதந்திரமும் மேலும் மேலும் பாதகமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் உலகில் இந்த இலட்சியங்களுக்காக உறுதியாக நிற்கும் எல்லா பத்திரிகையாளர்களையும் இவர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்’ என்று விருது தேர்வுக் குழு கூறியுள்ளது.

இவர்களுக்கு 1 கோடி ஸ்வீடிஷ் குரோனா பணம் பரிசாக வழங்கப்படும்.

ஓஸ்லோ நகரில் உள்ள நோர்வேஜியன் நோபல் இன்ஸ்டிடியூட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.

329 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் இருந்து இந்த இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் இளம்பெண் கிரேட்டா தன்பெர்க் மற்றும் ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்று அழைக்கப்படும் எல்லையில்லா பத்திரிகையாளர்கள் குழு, உலக சுகாதார அமைப்பு ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் ராப்லர் செய்தித் தளத்தின் இணை நிறுவனரான ரெஸ்ஸா, தமது தாய் நாடான பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் எதேச்சதிகாரம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை தொடர்பில் வெளிப்படுத்த கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தியதாக பாராட்டப்பட்டார்.

சுயாதீன செய்திப் பத்திரிகையான நொவாஜா கெசெட்டாவின் இணை நிறுவனர் முராடோவ், ரஷ்யாவில் நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலிலும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்து பல தசாப்தங்களாகப் போராடி வருவதாக நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையிலான அமைதிக்காக பணியாற்றிய அல்லது பாடுபட்ட தனி நபர்கள் அல்லது அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

“சுயாதீன, சுதந்திர மற்றும் உண்மை அடிப்படையிலான ஊடகத்துறை அதிகாரத் துஷ்பிரயோகம், பொய்கள் மற்றும் போர் பிரசாரங்களுக்கு எதிராக பாதுகாக்கிறது” என்று நோபல் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் இன்றி எமது காலத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்பு, ஆயுதக் குறைப்பு மற்றும் சிறந்த உலகம் ஒன்றை வெற்றிகரமாக மேம்படுத்துவது கடினமாகும்” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் இந்த விருதை வென்றது. அமைதிச் சூழலை மேம்படுத்தியது மற்றும் பட்டினிக்கு எதிரான முயற்சிகளுக்காக அந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

Sat, 10/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை