சூடானில் இராணுவ சதிப்புரட்சி: சிவில் அரச தலைவர்கள் கைது

சூடானில் இராணுவ சதிப்புரட்சி பற்றி செய்தி வெளியான நிலையில் அந்நாட்டு இடைக்கால அரசின் பல உறுப்பினர்களும் அவரிகளின் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் அப்துல்லாஹ் ஹம்தொக் மற்றும் குறைந்தது நான்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டவர்களில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் நேற்று சூரியோதயத்திற்கு சற்று முன்னர் அடையாளம் தெரியாத இடம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இராணுவம் இது பற்றி எந்த கருத்தும் வெளியிடாத நிலையில் ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூடானின் நீண்டகாலத் தலைவர் ஒமர் அல் பஷீர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதவி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும் சிவில் தலைவர்களுக்கு இடையே முறுகல் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி மர்மம் நீடித்து வருகிறது.

தகவல்துறை அமைச்சர் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இந்த கைது நடவடிக்கையை கூட்டு இராணுவப் படைகள் மேற்கொண்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தலைநகர் கார்டூமில் இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் வீதிகளில் டயர்களுக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் படங்களும் சமூக ஊடுகத்தில் வெளியாகியுள்ளது.

நகரம் முழுவதும் இராணுவத்தினர் மற்றும் துணைப் படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கார்டூம் விமானநிலையம் மூடப்பட்டு சர்வதேச விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

2019 இல் ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் பல மாதங்கள் நீடித்த ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இராணுவம் மற்றும் சிவில் இடைக்கால அரசு ஒன்று சூடானில் ஆட்சியில் இருந்து வருகிறது. இதில் இராணுவம் மற்றும் பலவீனமான கூட்டணி ஒன்றைக் கொண்ட சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படை என்ற இந்த இடைக்கால அரசு அதிகார பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சத்திட்டது.

தேர்தலை நடத்துவது மற்றும் சிவில் அரசு ஒன்றுக்கு ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இந்த நிர்வாகம் ஆட்சியில் இருந்து வருகிறது.

எனினும் இந்த உடன்படிக்கை குழம்பம் கொண்டதாக இருப்பதோடு பெரும் எண்ணிக்கையான பொட்டி அரசியல் குழுக்களுக்கு இடையேயும் இராணுவத்திற்குள்ளும் பிளவுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் பஷீரின் ஆதரவாளர்கள் கடந்த செப்டெம்பரில் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதை அடுத்து பதற்றம் மேலும் அதிகரித்தது.

சூடான் ஜனநாயத்திற்கான இடைக்கால அரசுக்கு எதிரானவர்கள் தலைநகர் கார்டூமில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு இராணுவம் ஆட்சியை கைப்பற்றும்படி அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் கூறி இருந்தன. கடந்த வியாழக்கிழமை இடைக்கால அரசுக்கு ஆதரவாக தலைநகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி நடத்தினர்.

எனினும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசு மீதான ஆதரவு அண்மைக் காலத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.

1956 தொடக்கம் சூடானில் நடைமுறைச் சாத்தியமான அரசியல் முறை ஒன்றை ஏற்படுத்துவது முடியாத ஒன்றாக இருந்து வருவதோடு அங்கு பல இராணுவ சதிப்புரட்சிகள் மற்றும் சதிப்புரட்சி முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை