கடற்றொழிலாளர் பிரச்சினையை கையிலெடுத்த தமிழ் கூட்டமைப்பு

கடல் வழி போராட்டம் ஒரு நாடகம் என டக்ளஸ் சாட்டை

நீண்டகாலமாக நீடித்து வரும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமது உள்ளூர் அரசில் கேள்விகுறியாகிவிடும் ஆபத்தில் உள்ளதால் இவ் விடயத்தினை கையில் எடுத்துள்ளார்கள். இதுவொரு சுயலாபத்திற்கான செயற்பாடாகும்.

ஏற்கனவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் ஒரு படம் காண்பிக்கப்பட்டது. அதற்கு பின்னர் புல்தரையில் விவசாயம் செய்வதாக இரண்டாவது படம் காண்பிக்கப்பட்டது. இது கடற்றொழிலாளர்களை பணயமாக வைத்து முன்னெடுக்கப்படும் மூன்றாவது படமாகும். என்னை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமையால் இவ்விதமான சிறுபிள்ளை விடயங்களை தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கின்றன. இது முதன்முறை அல்ல. இவை வேடிக்கையானவை என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முதல் பருத்தித்துறை வரையில் கடல்வழியாக கண்டனப் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடரும் அவரின் கருத்து,..

கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாகவே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணம் உள்ளனர். 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கடற்றொழில் அமைச்சு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்குரிய அணுகுமுறைகள் நான்கு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றேன். முதலாவது, இராஜதந்திர வழியிலானதாகும். அதற்காக செயற்பாட்டுத் திட்டமொன்றை வரைந்துள்ளேன். இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், செயலாளர் ஷிங்ரிலா, இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆகியோருடன் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளமையால் பதற்றமான நிலைமைகள் குறைவடைந்துள்ளன. இது எமது நகர்வுகளுக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகும். இரண்டாவதாக, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இழுவைப்படகுகளை பயன்படுத்தல், அத்துமீறி எல்லை தாண்டுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2017ஆம் ஆண்டு இழுவைப்படகுகள் சட்டம், 2018ஆம் ஆண்டு வெளிநாட்டு கப்பல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மூன்றாவதாக, எமது கடற்றொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேண்டாத தலையீடுகள், பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.நான்காவதாக, நீண்டகால நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை முன்னெடுப்பது. குறிப்பாக.மன்னார் வளைகுடா, பாக்குநீரிணை போன்ற பகுதிகளில் ஏற்படும் இயற்கையான விடயங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை