எரிபொருளின் விலையில் உடனடி அதிகரிப்பு இல்லை

நிவாரணம் பெற்றுத்தர திறைசேரியிடம் கோரிக்கை - அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவிப்பு

 

எரிபொருளின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் எரிபொருளுக்காக நிவாரணமொன்றை பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேற்படி வேண்டுகோள் தொடர்பில் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் கம்மன்பில, அந்த வேண்டுகோள் தொடர்பான திறைசேரியின் பதில் மற்றும் அது கிடைக்கின்ற திகதியைப் பொறுத்தே எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சரவையை கோரியிருந்தது.

எரிபொருள் விலையேற்றத்தினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 70 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிவாரணம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தால் எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் மீளாய்வு செய்யலாம் என்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

அதே வேளை எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கம்மன்பிலவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனையையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மீது சுமையை சுமத்த முடியாது என்றும் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையிலேயே திறைசேரியிடம் நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை