பஸ் கட்டணத்தை அதிகரிக்க எவ்வித யோசனையும் இல்லை

பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டி கட்டுகஸ்தோட்டையில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-, எரிபொருள் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால், பஸ் கட்டணத்திலும் அதிகரிப்பு செய்யப்பட வேண்டி வருமென பஸ் போக்குவரத்து தொடர்பான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர், அப்படி உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை.

பயணிகளுக்கு பஸ் கட்டணத்தை செலுத்த மின்னணு அட்டை முறை ஒன்று கடந்த 06 வருடங்களாக நடைமுறையிலிருந்த போதும் அது முறையான நடைபெறுவதில்லை.மேற்படி மின்னணு அட்டை முறையை மீண்டும் விரைவில் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையின்படி, இந்த அட்டைக்காக 300 ரூபா பொதுமக்களிடம் வசூலிக்க முன்மொழியப்பட்டுள்ளது, அதை வாங்கிய பிறகு, அவர்கள் பஸ் கட்டணங்களை மின்னணு அட்டைமூலம் செலுத்தலாம். பொதுமக்களுக்கு 300 ரூபாவுக்கு அட்டையை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே பயணிகளுக்கு மின்னணு அட்டை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்த அட்டை அறிமுகம் மூலம், பயணிகளிடம் உடன் பணக் கொடுக்கல் வாங்கல் இடம் பெறாத காரணத்தால் பஸ் உரிமையாளர்களின் தினசரி வருமான மோசடி, பயணிகளது மிகுதிப்பண மோசடி போன்ற அனைத்து சம்பவங்களும் முடிவுக்கு வருமென்று அவர் கூறினார்.

எம்.ஏ. அமீனுல்லா, அக்குறணை குறூப் நிருபர்

Wed, 10/13/2021 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை