பென்டோரா ஆவண விவகாரம்: சர்வதேச விசாரணையை கோருகிறார் சஜித்

இலங்கையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் பென்டோரா ஆவணங்கள் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் இதுதொடர்பில் வெளியப்படையான, பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பென்டோரா ஆவணங்களில் இலங்கையிலுள்ள சிலரின் பெயர்களும் வெளியாகியுள்ளன. மோசடியான முறையில் நிதியை சேகரித்துள்ளமை, நிதியை பதுக்கிவைத்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இதில் சுமத்தப்பட்டுள்ளன.

பென்டோரா ஆவணங்களில் பல உலக பிரபல்யங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இவ்வாறு வெளியாகிள்ளவர்களின் நபர்கள் தொடர்பில் தற்போதைய சூழலில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணவங்களிலுள்ள தகவல்கள் உண்மையாயின் வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகளாக இவை அமையும். மோசடிகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும். இந்த மோசடிகளானது நாட்டுக்கு கரும்புள்ளியென்பதுடன் பாரிய நிதி மோசடியாகும். மோசடியில் கூறப்படும் தொகையானது எமது நாடு பிர நாடுகளில் பெறும் கடன் தொகைகளையும் விட அதிகமானதாகும்.

நாடு மோசமான நிலையிலுள்ளது. மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர்கள் இல்லை. இல்லை என்ற குரல்தான் நாடு முழுவதும் ஒலிக்கிறது. ஆனால் நாட்டுக்கு வெளியில் டொலர்களை பதுக்கிவைத்துள்ளனர். மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் நிற்கின்றனர். கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. தடுப்பூசி மாபியாவில் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஆகவே பென்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து அந்த நிதி யாரிடமுள்ளது என்பது தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற வெளிபடையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 
Thu, 10/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை