உலகளாவிய கொரோனா பலி ஐந்து மில்லியனை தாண்டியது

உலகளவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டிவிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் காட்டுகிறது.

முதல் இரண்டரை மில்லியன் மரணங்கள் பதிவாவதற்கு ஓராண்டு காலத்திற்கு மேலான நிலையில், அடுத்த எட்டு மாதங்களுக்குள் மேலும் இரண்டரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

மிக அதிகமாக, அமெரிக்காவில் 700,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். பிரேசில், இந்தியா, மெக்சிகோ, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பிராந்திய அடிப்படையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 21 வீதம் தென்னமெரிக்கக் கண்டத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில், உலகில் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு ஐந்து பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் அண்மைய வாரங்களில் கொரோனா உயிரிழப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் இதற்குமுன் இல்லாத அளவாக, கடந்த வியாழனன்று ஒரே நாளில் கொரோனாவால் 883 பேர் உயிரிழந்தனர். அங்கு தகுதியுள்ளோரில் 33 வீதத்தினர் மட்டுமே தங்களது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்னும் முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசியைக்கூட போட்டுக்கொள்ளவில்லை என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. 

இப்போதைக்கு ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 194 நாடுகளில் 187இல் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை