பாடசாலை வரும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போர் கைதாவர்

அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

 

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீள கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடைகள் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்தகையோர் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கமென்ற வகையில் முழுமையான அவதானத்தைச் செலுத்தி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் எனினும் அவர்கள் அதில் திருப்தியடையவில்லை என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நிலையில் எதிர்வரும் 21ம் திகதி கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் இலட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் தமது பொறுப்பை உணர்ந்து கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை