ஜூலை படுகொலையின் பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்

நோர்வேயில் அம்பு மூலம் வில்லை எய்து தாக்குதல் நடத்தி பலரைக் கொன்ற இஸ்லாத்துக்கு மதம் மாறிய ஆடவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் கடும்போக்காளராக மாறி இருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய டென்மார்க் பிரஜையான அந்த ஆடவர் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு நகரான கொங்ஸ்பேர்க்கில் நடத்திய தாக்குதலில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர் அன்று இரவே கைது செய்யப்பட்டு பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2020இல் கடைசியாக இந்த ஆடவருடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்ததாக பிராந்திய பொலிஸ் தலைவர் ஓலே பிரெட்ருப் செவருட் தெரிவித்துள்ளார்.

இதில் கொல்லப்பட்ட அனைவரும் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்தி ஆறு நிமிடத்திற்குள்ளேயே அந்த ஆடவரை பொலிஸார் எதிர்கொண்ட நிலையில், அவர் பொலிஸாரை நோக்கியும் அம்பு எய்துள்ளார். இதனை அடுத்து பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தப்பியோடிய அந்த ஆடவர் 35 நிமிடங்கள் கழித்தே கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோதே தாக்குதலுக்கு இலக்கான ஐவரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் தலைவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் 'பயங்கரமானது' என்று பதவியில் இருந்து வெளியேற சில மணி நேரத்திற்கு முன்னர் நோர்வே பிரதமர் எர்னா செல்பேர்க்கு வர்ணித்துள்ளார்.

கொங்ஸ்பேர்க்கின் மேற்கு பக்கம் உள்ள பேரங்காடி ஒன்றுக்குள் வைத்து இந்தத் தாக்குதுல்களை ஆரம்பித்ததாக அந்தத் தாக்குதல்தாரி குறிப்பிட்டுள்ளார். இதில் அப்போது அந்தக் கடையில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

தலைநகர் ஓஸ்லோவிலிருந்து 68 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அந்நகரின், பேரங்காடி உட்பட வெவ்வேறு இடங்களில் அரை மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் அந்த ஆடவர் அம்புத் தாக்குதலை நடத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் காயமடைந்த அதிகாரி மற்றும் மற்றுமொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயிராபத்து இல்லை என்று கூறப்பட்டது.

காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் மூன்று ஆம்புலன்ஸ் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் எங்கும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் தனியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட பொலிஸார், தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை. கடந்த 2011 ஜூலையில் உடோயோ தீவில் 77 பேர் படுகொலை செய்யப்பட்ட தீவிர வலதுசாரி கடும்போக்காளரான அன்டெர்ஸ் பஹ்ரிங் ப்ரிவிக்கின் தாக்குதலுக்கு பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல் சம்பவமாக இது உள்ளது.

பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பொலிஸார் துப்பாக்கியுடன் பணி புரிவதில்லை. எனினும் இந்த சம்பவத்தை அடுத்து அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் ஆயுதம் வைத்திருக்குமாறு நோர்வே பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

Fri, 10/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை