ஈராக் பாராளுமன்ற தேர்தல்: அல் சத்ரின் கட்சிக்கு வெற்றி

ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் ஷியா முஸ்லிம் மதத் தலைவரான முக்ததா அல் சத்ரின் கட்சி ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பெரு வெற்றியை நோக்கி முன்னேறி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் மற்றும் அந்தக் கட்சி அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நூரி அல் மலிக்கி, ஷியா கட்சிகளில் அடுத்து மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

2003 ஆம் ஆண்டு சதாம் ஹுஸை அரசு கவிழ்க்கப்பட்ட அமெரிக்க படையெடுப்புக்கு பின்னர் ஈராக் அரசில் பெரும்பாமையினரான ஷியாக்கல் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அரசு மீது அதிருப்தி அதிகரித்த சூழலில் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஈராக்கில் சில மாதங்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

எனினும் இதுவரை இல்லாத அளவுக்கு 41 வீதமாக மிகக் குறைந்த வாக்குப் பதிவே இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தலைநகர் பக்தாத் உட்பட ஈராக்கின் பல மாகாணங்களில் வெளியாகி இருக்கும் ஆரம்ப முடிவுகளின்படி அல் சத்ர் 70க்கும் அதிகமான ஆசனங்களை வென்றுள்ளார். இதனால் அரசு அமைப்பதில் அவர் கணிசமான செல்வாக்கு செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அல் சத்ர் இதுவரை 73 ஆசனங்களை வென்றிருப்பதாக அவரின் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் சத்ர் முதலிடத்திற்கு வந்திருப்பதாக ஈராக் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டபோதும் அவர் வென்ற ஆசனங்களை குறிப்பிடவில்லை.

இதில் 2019 ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பிரபலம் பெற்ற சீர்திருத்தத்திற்கு ஆதரவான வேட்பாளர்கள் 329 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் பல இடங்களை வென்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகளில் கூறப்பட்டது.

எனினும் சுமார் 600 ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் போராளிகளுடன் தொடர்புபட்ட ஈரான் ஆதரவு கட்சிகள் 2018 தேர்தலை விடவும் குறைவான ஆசனங்களை வென்று பின்னடைவை சந்தித்துள்ளன. 2018 தேர்தலில் முதலாம் இடம் பெற்றது தொடக்கம் அல் சத்ர் ஈராக் அரசியலில் தமது அதிகாரத்தை வலுப்படுத்தி வருகிறார். அவரது கூட்டணி முந்தைய தேர்தலில் 54 ஆசனங்களை வென்றது.

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை