நடேசனிடம் இரண்டாவது தடவையாகவும் வாக்குமூலம்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று பதிவு

பென்டோரா பேப்பர்ஸ் ஆவண வெளியீடு தொடர்பில் பிரபல தொழிலதிபரும் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்‌ஷவின் கணவருமான திருக்குமார் நடேசன் நேற்றைய தினம் மீண்டும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானார்.  ஏற்கனவே இவ் விடயம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளதுடன் அன்றைய தினம் அவரிடம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. அன்றைய தினம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுடன் தாம் பிறிதொரு தினத்தில் விபரமாக வாக்குமூலம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் தருமாறு அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்றைய தினம் அதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கிணங்க நேற்றைய தினம் காலை 10 மணிக்கு திருக்குமார் நடேசன் கொழும்பு 07 ல் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சமுகமளித்தார்.

பென்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்தமைக்கமைய ஆணைக்குழு திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்ய தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை