மத்திய மலை நாட்டில் கடும் மழை; நீர் மட்டம் உயர்வு

மத்திய மலை நாட்டில் கடும் மழை; நீர் மட்டம் உயர்வு-Upcountry Heavy Rain-Sluice Gate Open

- வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு எச்சரிக்கை

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள், நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

மஸ்கெலியா பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.கெனியோன் மற்றும் லக்ஸபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நோர்ட்டன் பகுதியில் பதிவாகிவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் வான் பாய்ந்து வருவதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன இதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

இதே நேரம் நுவரெலியா ஹட்டன் கொழும்பு ஹட்டன் ஆகிய பிரதான பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹட்டன் அண்டிய பல இடங்களில் மழையுடன் கடும் காற்று வீசுவதனால் ஹட்டன் உள்ளிட்ட சில பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று (11) காலை வரை மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் விசேட, ஹற்றன் சுழற்சி நிருபர்கள்

Tue, 10/12/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை