பெருந்தோட்ட பகுதிக்கும் தேசிய சுகாதார முறைமை : சுகாதார குழு வழங்கிய அறிக்கை பற்றி கலந்துரையாட நடவடிக்கை

சபையில் வேலுகுமார் எம்.பியின் கேள்விக்கு அமைச்சர் ஜீவன் பதில்

பெருந்தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள் உள்ளீர்ப்பது குறித்து கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறைசார் மேற்பார்வை குழு வழங்கியிருந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பி வேலுகுமார், வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வேலுகுமார் எம்.பி தமது கேள்வியில், தேசிய சுகாதார முறையை பெருந்தோட்டப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக பெருந்தோட்ட வைத்தியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் எங்களுக்கு உடன்பாடுகள்இல்லை. கொரோனா வைரஸ் காலத்தில் இந்த வைத்தியசாலைகள் எந்தவிதமான பங்களிப்புக்களையும் செய்யவில்லை. கொரோனா வைரஸிலிருந்து பெருந்தோட்ட மக்களை மீட்பதற்காக பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டனவா? என்றார். இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களுக்கு தடுப்பூசி நிலையங்களுக்கு செல்வதற்கு பிரச்சினைகள் காணப்பட்டன. மேலும் வளப் பற்றாக்குறையும் காணப்பட்டன. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே நாம் பிரஜாசக்தி செயலணியை உருவாக்கியிருந்தோம்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. கடந்த பல வருடங்களாகவே இந்தநிலை நீடிக்கிறது. இது தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கலந்துரையாடி இருந்தோம். இந்த விடயத்தில் மலையகத்தில் உள்ள அரசியற் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மலையகத்துக்கு தேவையான சுகாதாரத் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடலாம் என்றார்.

குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய வேலுகுமார் எம்.பி, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இ.தொ.கா மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்திருந்தது. ஏனைய சமூகங்கள் மருத்துவ கற்கைகளை பூர்த்தி செய்த மருத்துவர்களிடமிருந்து மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிற நிலையில், மலையக மக்கள் மாத்திரம் வைத்தியரல்லாதோர்களை கொண்டு வைத்திய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய துர்பாக்கியமான நிலை காணப்படுகிறது.

தேசிய சுகாதார முறைமைக்குள் மலையக மக்களையும் ஈர்ப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். இது தொடர்பில் சுகாதாரத்துறை மேற்பார்வை குழுவின் அறிக்கையும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் எடுக்கப்போகும் வேலைத்திட்டங்கள் என்ன? எனவும் வினவினார்.

இந்த அறிக்கை தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது பதிலளித்தார் .

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Tue, 10/05/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை