வடமாகாண முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்த விசேட ஆய்வு

மாவட்ட GA, அரச அதிகாரிகளுடன் ஆளுநர் ஜீவன் நாளை பேசுவார்

 

வட வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் அனைத்து துறைகளையும் முன்னேற்றும் வகையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அதுதொடர்பான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அதனை முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாணத்தின் அனைத்து  துறைகளிலும் புதிய திருப்பத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்காக ஒருமைப்பாட்டு செயற்குழு ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் அது தொடர்பில் ஆராயும் விசேட பேச்சுவார்த்தையொன்றை நாளை வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுமென்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தினகரனுக்கு அவர் வழங்கிய விசேட பேட்டியொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் நீண்ட காலமாக தொடரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் நிலவும் விவசாயிகளின் பிரச்சினை, மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய இயற்கை பசளை பாவனையை ஊக்குவிப்பதுடன் இயற்கை பசளையை உபயோகித்து விவசாயத்தை முன்னெடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென்றும் அது தொடர்பில் அறிவுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

வறுமை நிலையிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், அவர்களின் பொருளாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்டச்செயலாளர்களுடனான கூட்டத்தின்போது அது தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை