எதிரணி உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உர விவகாரம் தொடர்பாக சுவரொட்டிகள் மற்றும் அட்டைகளைத் தாங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

உர விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. கேள்வி நேரத்தை தொடர்ந்து எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பசளை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் 10 வருடங்களிலே இரசாயன பசளையிலிருந்து சேதனப் பசளைக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதற்கு முரணாக ஒரு வருடத்தினுள் சேதனப் பசளைக்கு மாற தயாராவது மக்கள் ஆணைக்கு முரண் என்றும் குறிப்பிட்டார். இதனை தனியான விவகாரமாக ஆராயலாமென சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால் எதிரணியினர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை முன்வைத்ததோடு சுவரொட்டிகள் மற்றும் அட்டைகளைத் தாங்கி போராட்டத்தில் குதித்தனர்.

எதிரணியின் எதிர்ப்பிற்கு மத்தியில் அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை தொழில் அமைச்சர் சமர்ப்பித்தார்.

எதிரணியின் எதிர்ப்பு மற்றும் கோசத்திற்கு மத்தியில் செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பாராளுமன்றம் நவம்பர் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம்

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை