11 கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் பதில்
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே மிகவும் பொருத்தமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி எழுத்துமூலம் வழங்கியுள்ள பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை பொது ஜன பெரமுன கட்சியின் அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் இருக்குமானால் கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மேற்படி 11 கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யுக தனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
அந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி பதில் கடிதம் ஒன்றை அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, அபே ஜனபல கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி மற்றும் யுதுகம் தேசிய அமைப்பு என்பன மேற்படி 11 கட்சிகளில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn