நாட்டு நலனுக்காக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வருகின்றனர்

Ali Sabry-Milad Un Nabi

- அலரி மாளிகை தேசிய மீலாத் விழாவில் நீதி அமைச்சர் அலி சப்ரி

நாட்டின் நலனுக்காக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அது தொடர்பில் சிறப்பான வரலாறொன்று இருப்பதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஆனால் சிலர் தமது சொந்த கொள்கைகளை முன்வைத்து குர்ஆன் தொடர்பில் தவறான விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஆனால் எமது அழகான மார்க்கத்தில் தலையீடு செய்ய அவர்களுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மீலாதுன் நபி தின விழா பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சாதாரண தலைவர் கிடையாது. அவர் இந்த நாட்டை மீட்டு ஒன்றுபடுத்தினார். பயங்கரவாதத்திடம் இருந்து நாட்டை விடுதலை செய்தவர் அவர். சகல மக்களும் எந்த பாகுபாடுமின்றி நடத்தி வருகிறார். அவர் ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்தார் நிகழ்வுகளை பெருந்தொகையான முஸ்லிம்களின் பங்களிப்புடன் நடத்தி வந்தார். தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும் கடந்த கால அனர்த்தங்களால் அவை தடைபட்டன. நீண்டகாலமாக நீங்கள் செய்து வரும் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இஸ்லாமிய நாடுகளின் உண்மையான நண்பனாக இலங்கை செயற்பட்டு வருகிறது. பலஸ்தீன மக்களின் உரிமைக்காக மஹிந்த ராஜபக்‌ஷ குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெயரில் பலஸ்தீனில் வீதியொன்று கூட பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சிறந்த வரலாறொன்று இருக்கிறது. நாம் நாட்டு நலனுக்காக பங்களித்துள்ளோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களித்திருக்கிறோம். யுத்தம் நடைபெற்ற போதும் முஸ்லிம்கள் தங்கள் மேலான பங்களிப்பை நாட்டுக்காக வழங்கினார்கள்.

புலனாய்வுப் பிரிவில் பலர் இருந்து நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வர பங்களிப்புச் செய்தார்கள். முஸ்லிம்கள் எப்பொழுதும் நாட்டுக்கு த் தங்கள் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். முஹம்மது நபி அவர்கள் சமாதானம், நல்லிணக்கம்,சகோதரத்துவம்,மனிதாபிமான நடத்தல் தொடர்பாக வழிகாட்டியுள்ளார்.

உங்களுக்கு உங்கள் மார்க்கம் எமக்கு எமது மார்க்கம் என்று புனித குர்ஆன் போதிக்கிறது. மதத்தில் கட்டாயப்படுத்தல் கிடையாது.

சிலர் தமது சொந்த கொள்கைகளை முன்வைத்து தவறான விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஆனால் எமது அழகான மார்க்கத்தில்

தலையீடு செய்ய அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இனங்களுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் நல்லுறவை பாதுகாக்க நாம் தொடந்து பாடுபடுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாக்க பங்களித்து வருகிறார் என்றார். (பா)

Fri, 10/22/2021 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை