காரணமின்றி கைதாவோர் தொடர்பில் அறியத்தரவும்

ஜனாதிபதி நியமித்த குழு மூலமாக தீர்வு தரப்படும்

யாராவது காரணமின்றி தவறாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நிவாரணம் வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். யாராவது தவறாக  கைதாகியிருந்தால் இந்தக் குழுவில் முறையிடலாம். இந்தக் குழு ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைத்த பின்னர் ஜனாதிபதி ஆராய்ந்து முடிவெடுப்பாரென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீதித் துறையுடன் தொடர்புள்ள 60 அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முக்கியமான யோசனைகள். சமூக தளங்கள் தொடர்பில் மேற்பார்வை அவசியம் என பலரும் கருத்து முன்வைத்தனர். கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போட மாட்டோம். ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் குரோதத்தை வளர்க்க இடமளிக்க முடியாது. பொய்யான விடயங்களை முன்வைத்தால் வழக்குத்தொடரக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பெண்களின் உரிமை தொடர்பில் விடயங்கள் உள்ளடக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் கருத்து முன்வைத்தனர்.

இது தொடர்பில் பரவலாக ஆராயப்படுகிறது. எனது கோரிக்கைக்கு அமைவாக 41 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். யாராவது தவறாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் இந்தக் குழுவுக்கு தெரிவிக்கலாம். இந்தக் குழு ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கும்.

46 பேர் தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து முடிவெடுப்பார். இதற்கு முன்னர் இவ்வாறு நடக்கவில்லை. பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்ய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு குந்தகமற்ற நாட்டுக்கு உகந்த சட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில வழக்குகள் மீளப் பெறப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு கடந்த ஆட்சியில் மீளப் பெறப்பட்டது. சாட்சி இன்றி அரசியல் நோக்கில் முன்வைக்கப்படும் வழக்குகளை இவ்வாறு மீளப் பெற நேரும்.

கடந்த ஆட்சியில் ஆட்களை தெரிவு செய்து எதிராக வழக்க தொடரப்பட்டது. வேறு நோக்கங்களுக்காகவே வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக உங்கள் ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. சாட்சி இன்றி வழக்கு மீளப்பெறப்பட்டது. நாம் இவற்றில் எந்தத் தலையீடும் செய்வதில்லை.

பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் திவிநெகும திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு பணம்கொடுத்தது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டது. இவற்றில் ஒரு சதமாவது முறைகேடாக பணம் பெற்றதாக கிடையாது. அவ்வாறான வழக்குகளிலிருந்து அவர்கள் தப்புவது சாதாரணமானதே. நீதிமற்ற சுதந்திரத்தில் தலையீடு செய்ய மாட்டோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 10/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை