ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் இன்று முதல் மீளவும் ஆரம்பம்

- கல்வியமைச்சின் செயலாளர் கபில அறிவிப்பு

நாடு முழுவதுமுள்ள ஆரம்ப பிரிவுகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற கொவிட்19 செயலணி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்ததாவது,

ஆரம்ப பிரிவை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை  ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும்.200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

கொவிட்19 செயலணி கூட்டத்தில் இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தனவினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை