வடகொரியா புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை

வட கொரியா இந்த மாதத்தில் தனது நான்காவது ஏவுகணைச் சோதனையாக கடந்த வியாழக்கிழமை புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை சோதித்ததாக குறிப்பிட்டுள்ளது.

அணு சக்தித் திறன் கொண்டதாக நம்பப்படும் புதிய அதிவேக ஏவுகணை ஒன்றை வட கொரிய சோதித்து ஒருசில நாட்களிலேயே இந்தப் புதிய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.

இந்த ஏவுகணைச் சோதனை பெரும் ஸ்திரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்தோனி பிளிங்கன் எச்சரித்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபை முன்வைத்த தீர்வுகளை வட கொரியா மீண்டும் மீண்டும் மீறுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்பாதுகாப்புக்கு இந்த ஆயுதங்கள் தேவைப்படுவதாக வட கொரியா குறிப்பிடுவதோடு, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக குற்றம்சாட்டியது.

கடும் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தனது ஆயுதங்களை மேற்படுத்தும் செயற்பாட்டை குறைப்பதில்லை என்பதையே இந்த புதிய சோதனைகள் காட்டுகின்றன. புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை பெரிய அளவிலான போர் செயற்பாடுகளை வெளிக்காட்டியதாகவும் இதில் புதிய முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அண்டை நாடான தென் கொரியாவுக்கு அமைதிக் கரம் நீட்டுவது போன்று, அந்த நாட்டுடனான முக்கிய அவசர தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த விரும்புவதாக கூறி இருக்கும் சூழலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

Sat, 10/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை