உணவுப்பஞ்சம் ஏற்படுவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

 

எதிரணி கூறுவது போன்று நாட்டில் உணவுப் பஞ்சமொன்று ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.  நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 'நனோ நைற்றிஜன்' திரவ உரத்தின் தரம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாதென தெரிவித்த அவர், அந்த உரத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பை அரசாங்கம் ஏற்குமென்றும் சுட்டிக்காட்டினார்.

27/2 இன் கீழ் பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய உரப் பிரச்சினை மற்றும் அரிசி இறக்குமதி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மஹிந்தானந்த மேலும் கூறுகையில்,

விவசாயிகளுக்கு நெல்லுக்கு சிறந்த விலை கிடைக்கின்றது. அதனால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் 30 ரூபாவிற்கு ஒரு கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டது. இப்போது 70 ரூபா வழங்கப்படுகின்றது. இப்போது உரப்பிரச்சினைக்கும் தீர்வு வழங்கி வருகின்றோம். நாம் இறக்குமதி செய்துள்ள நைற்றிஜன் திரவ உரம் உயர் தரத்தில் உள்ளது.

நனோ நைற்றிஜன் உரம் 30ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். உரத்தின் தரம் தொடர்பில் பொறுப்பை அரசாங்கம் ஏற்கிறது, எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது போன்று எமது நாட்டில் உணவுப் பஞ்சம் ஒருபோதும் ஏற்படாது. அதற்கு அரசாங்கம் இடமளிக்காது.

நாட்டின் தேசிய உற்பத்தியில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியே தேவைப்படுகிறது. அதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கும். எமது முயற்சிகளில் சில குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் பிரச்சினைகளை நாம் சரியாக கையாள்வோம். இந்த கொள்கை முடிவு சிறுநீரக பிரச்சினை காரணமான எடுக்கப்பட்டது. எமது கொள்கை பிரகடனத்திலும் உள்ளது என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Fri, 10/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை