லெபனான் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பதற்றம் அதிகரிப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வருடம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லபெனீஸ் படைகள் என்னும் குழுக்களை சேர்ந்த கிறித்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் இதை லெபனீஸ் படை அமைப்பு மறுத்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 219 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணை பெரும் பதற்றத்துக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.

ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள், பெய்ரூட் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் எனத் தெரிவித்துள்ளன. ஆனால் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிபதிக்கு ஆதரவாகவுள்ளனர்.

பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிப்பில் பெரும் பகுதியான நகரம் சேதமடைந்தது ஆனால் இதுவரை அந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு அண்மைக் காலத்தில் லெபனானில் நடைபெற்ற மோசமான வன்முறையாகும்.

“தங்களின் சுயவிருப்பத்திற்காக நாட்டை பணயம் வைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என லெபனானின் ஜனாதிபதி மைக்கேல் அவுன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெய்ரூட் குண்டு வெடிப்பு குறித்த விசாரணை அரசியல் சார்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.

அதேபோன்று இதை விசாரிக்கும் நீதிபதி தாரேக் பித்தாரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

அந்த போராட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. ஷியா பிரிவு குழுவினரும் கிறித்தவ ஆயுததாரிகளும் மாறி மாறி சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இந்த மோதல் பல நேரம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உள்ளூர் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகளை விட்டுத் தப்பி ஓடினர்.

அருகாமையில் உள்ள படசாலை ஒன்றில் குழந்தைகளை தரையில் கைகளை நீட்டி படுத்து பாதுகாப்பாக இருக்க ஆசிரியர்கள் தெரிவித்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை மற்றும் இராணுவ செய்தி வட்டாரங்கள், இந்த சம்பவத்தில் சுடப்பட்டவர்கள் பலருக்கு தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா மற்றும் அமல் குழுவினர் தங்களின் எதிர்த் தரப்பு குழுவான கிறித்தவ லெபனீஸ் படை மீது குற்றம் சுமத்தியுள்ளது. “லெபனீஸ் படையை சேர்ந்தவர்கள் வீதிகளிலும் வீட்டுக்கூரைகளிலும் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

லெபனீஸ் படைத் தலைவர் சமீர் கீகா இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது இராணுவம். மேலும் துப்பாக்கிதாரிகளை வீதியில் பார்க்க நேர்ந்தால் அவர்கள் சுடப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

நீதிபதி மீது புகார் தெரிவிப்பதால் பெய்ரூட் வெடிப்பு வழக்கு விசாரணை தாமதமாகிறது என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் நாட்டின் அரசியல் தலைமை மீது குற்றம் சுமத்துகின்றனர்

கடந்த வருடம் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் பலர் உயிரிழந்தனர்.

அரசு அதிகாரிகளுக்கு இம்மாதிரியாக அதிகளவிலான அமோனியம் சேமித்து வைத்திருப்பது குறித்து தெரிந்தும் அதன் ஆபத்து குறித்து அறிந்தும் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த தவறிவிட்டனர்.

 

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை