தெற்காசிய நாடுகளுக்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது சிங்கப்பூர்

கொவிட்-19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 14 நாட்கள் பயண வரலாறு தொடர்பான நடைமுறைப் பட்டியலில் இருந்து ஆறு தெற்காசிய நாடுகளை சிங்கப்பூர் நீக்கியுள்ளது.

பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளே சிங்கப்பூரின் பயணக் கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து இவ்வாறு நீக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, இந்த நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் சிங்கப்பூரில் பிரவேசிக்கவும் சிங்கப்பூர் வழியாகப் பயணங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றின் உலகளாவிய நிலவரத்திற்கு ஏற்ப சிங்கப்பூர் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு தெற்காசிய நாடுகளை அதன் பயணக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து இவ்வாரம் முதல் நீக்குவதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

என்றாலும், இந்நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் 10 நாட்கள் ஒரு பிரத்தியேக வசதிகள் கொண்ட வீட்டில் தங்கியிருப்பதற்கான அறிவிப்பு காலமும் அடங்கியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த நாடுகளின் கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்து இந்நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற மெய்நிகர் செய்தியாளர் மாநாடொன்றில் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், ‘இந்த நாடுகளில் கொவிட் 19 தொற்று பரவுதல் கட்டுப்பாட்டு நிலைமை தற்போது முன்னேற்றகரமாக உள்ளது. அதனால் அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்கு இறங்குவதைத் தடுக்கும் கடுமையான விதிகள் இனி தேவையில்லை’ எனக் குறிப்பிட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சுட்டிகக்காட்டியுள்ளது.

இதேவேளை சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலும் இவவ்வார நடுப்பகுதி முதல் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இதுவரையும் கொவிட் 19 தொற்றுக்கு 165,663 உள்ளாகியுள்ளனர். அவர்களில் 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை