ஞானசார தேரரின் நியமனம் ஹக்கீம் கவலை வெளியீடு

இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துமாம்

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரின் நியமனத்தின் பின்னணியில் மறைகரங்களும், வெளிச்சக்திகளும் இருக்கலாம். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான முறுகலையும் துருவப்படுத்தலையும் மேலும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம்(28) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியை எப்படியாவது கைப் பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்செயல்களைத் தொடர்ச்சியாகத் தூண்டி வருபவரும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக் கண்டிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

 

 

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை