பாகிஸ்தான் பூகம்பத்தில் பெண்கள் சிறுவர்களே அதிகம் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பல கட்டடங்களும் இடிந்து சேதமாகி இருக்கும் சூழலில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 கிலோமீற்றர் ஆழமற்ற மேலோட்டமான பகுதியில் 5.9 ரிச்டர் அளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆழமற்ற பகுதியில் ஏற்படும் பூகம்பம் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளனர். பலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பூகம்பத்தால் 100க்கும் அதிகமான சேற்று மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதோடு மேலும் பல எண்ணிக்கையான கட்டடங்களும் சேதமாகி இருப்பதால் நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்திருப்பதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு குவெட்டாவில் அமைந்திருக்கும் ஹார்னாய் மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் எண்ணிக்கையான நிலக்கரிச் சுரங்கங்கள் இருப்பதால் அவை இடிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பலுகிஸ்தான் உள்துறை அமைச்சர் சியாவுல்லா லங்கு தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டதால் அதன்பின்னர் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்லாமல் வீதிகளிலேயே தஞ்சமடைந்தனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கைபர் பக்துவான் மாகாணத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பெஷாவர் வரை இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டது.

Fri, 10/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை