சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ADB வங்கி உச்சளவு ஒத்துழைப்பு

வங்கியின் தெற்காசிய வலய பணிப்பாளர், சுகாதார அமைச்சரிடம் தெரிவிப்பு 

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உச்சளவு ஒத்துழைப்பை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்குமென வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் நாயகம் கெனிஷி யோகோயமா தெரிவித்துள்ளார். 

அதுதொடர்பான வேலைத்திட்டங்கள் தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் சிலர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று இடம் பெற்றுள்ள அந்த சந்திப்பின்போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளதுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் புதிய சுகாதார அமைச்சருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இலங்கையானது மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சியடைவதாகவும் வங்கியின் பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆசிய அபிவிருத்தி வங்கியானது இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக சுகாதாரத்துறையில் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கும் அவர் மிகுந்த நன்றியை தெரிவித்தார்.

சில கட்டுப்பாடுகளுடன் நாடு தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் மேலும் சில முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 
Sat, 10/02/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை