91 குறுந்தூர ரயில் சேவைகளை நடத்த அரசாங்கம் தீர்மானம்

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அலுவலக ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 50 அலுவலக ரயில் சேவைகளை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிருமித்தொற்று நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் ரயில்களை திருத்துவதற்கு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சில ரயில்களில் இயந்திர கோளாறு,மின்சார கோளாறு உள்ளிட்டவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் புதிய ஆசனங்களை பொருத்துதல், வர்ணம் பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய 91 ரயில் சேவைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது கடமைகளுக்கு செல்லும் வகையில் அவர்கள் பணி நிறைவு செய்யும் நேரங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டு ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை