மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆரம்பம்!-90 Schools in Mannar Re-Open on Oct 21

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் பாடசாலையை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்கருதி விஷேட போக்குவரத்து சேவைகள் நடைபெற ஏற்பாடுகளுடன் மன்னார் தனியார் போக்குவரத்து சேவையினர் முப்பது வீத கழிவுடன் போக்குவரத்து பருவகால பயணச் சீட்டு வழங்குவதாக இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்துக்கு நன்கொடையாக வழஙகப்பட்ட முகக் கவசங்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக மன்னார் வலயத்துக்கு 8000 முகக் கவசங்களும், மடு வலயத்துக்கு 4000 முகக் கவசங்களும்நேற்று (12) வழங்கப்பட்டன. மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவற்றை இரு கல்வி வலய பணிப்பாளர்களிடம் கையளித்தார்.

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ​நேற்று (12) மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் மன்னார் கல்வி வலயம் மற்றும் மடு கல்வி வலயம் ஆகிய இரு கல்வி வலய பணிப்பாளர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் 2588 மாணவர்கள் கொண்டதாகவும்

மன்னார் கல்வி வலயத்தில் 46 பாடசாலைகள் 3784 மாணவர்கள் கொண்டதாகவும் இவ் பாடசாலைகள் ஆரம்பமாக இருக்கின்றன.

இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்பற்றியும்; ஆராயப்பட்டது. அப்பொழுது இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ் கூட்டத்தில் சுகாதார தொடர்பான விளக்கம் அளித்தார்.

அத்துடன் மாணவர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு செல்லுவதற்கான போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம்.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்தும் மன்னாரிலிருந்தும் மற்றும் வவுனியாவிலிருந்தும் ஆசிரியர்களுக்காக விஷேட போக்குவரத்து சேவைகளை ஒழுங்கு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலிருந்து தினமும் பயணம் செய்யும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு முப்பது வீதம் கழிவில் தாங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பயன் அடையக்கூடியதாக இருக்கும். அத்துடன் இரு பகுதினரையும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி முறையான உள்ளுர் சேவைகளையும் நடாத்தும்படியும் வேண்டியுள்ளோம்.

எமக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள முகக் கவசங்கள் மன்னார் வலயத்துக்கு 8000 முகக் கவசங்களும், மடு வலயத்தக்கு 4000 முகக் கவசங்களும் மாணவர்களுக்காக இன்று (12) இரு கல்வி வலய பணிப்பாளர்களிடம் கையளித்துள்ளோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி இவ்விரு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளும் அத்தோடு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திணைக்களத்துக்கு கீழ் இயங்குகின்ற முன்பள்ளி பாடசாலைகளையும் இவ் தினத்தில் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

தலைமன்னார் விஷேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ

Wed, 10/13/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை