மேற்குக் கரையில் 3,100 புதிய குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களில் 3,100க்கும் அதிகமான புதிய வீடுகளை அமைக்கும் மேம்பட்ட திட்டம் ஒன்றை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.

1,800 வீட்டு அலகுகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கி இருக்கும் திட்டக் குழு ஒன்று மேலும் 1,344 வீடுகளுக்கு ஆரம்ப ஒப்புதலை அளித்துள்ளது.

இஸ்ரேல் கொள்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பகிரங்கமாக கண்டித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையே எதிர்பார்க்கப்படும் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக குடியேற்ற விரிவாக்கத்தை கடுமையாக கண்டிப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது.

1967 மத்திய கிழக்கு போரில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் 145 குடியேற்றங்களில் 600,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான சர்வதேச சமூகம் இந்த குறியேற்றங்கள் சட்டவிரோதமானது என்று கருதுகின்றனர். எதிர்கால சுதந்திர நாடு ஒன்றின் நிலம் என்று தாம் உரிமை கோரும் பகுதியில் குடியேற்ற நிர்மாணங்கள் மூலமான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலகம் எதிர்க்க வேண்டும் என்று பலஸ்தீனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த புதிய வீடுகளின் அதிகப் பெரும்பாலானவை மேற்குக் கரையில் ஆழமாக ஊடுருவி இருக்கும் குடியேற்றங்களில் கட்டப்படுவதாகவும் சில தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் பாரிய அளவில் விரிவுபடுத்தப்படுவதாகவும் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு எதிரான கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏற்கனவே இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,355 குடியேற்ற வீடுகளுக்கு கேள்விமனுக்கான அழைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நிர்வாகத்தால் விடுக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் இந்தத் திட்டம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

Fri, 10/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை