காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி மரணம்

காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி மரணம்-Father-Dughter-Son Drown to Death

- சோகத்தில் காத்தான்குடி; வெள்ளைக் கொடி பறக்கவிட கோரிக்கை
- மரணித்த மாணவர்களை மெச்சும் பாடசாலை அதிபர் (VIDEO)

வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில்  நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூன்று பேர் இன்று (20) புதன்கிழமை மாலை சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி பதுறியா வீதியில் வசிப்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மகளின் சிகிச்சைக்காக குடும்ப சகிதம் வேன் ஒன்றில் வேன் சாரதி அடங்கலாக 9 பேர் சென்றுள்ளனர்.

கொழும்பு சென்ற இவர்கள் மொணராகல வழியாக காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்த போது வெல்லவாயவிலுள்ள எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அங்கு தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளும் நீராடியுள்ளனர். இதில் மகள் நீரில் மூழ்குவதை அவதானித்த தந்தையும் சகோதரனும் மீட்க முற்பட்ட போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்

மனைவியும் மற்றைய இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் சென்ற ஏனைய உறவினர்களும் வெளியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு ஒன்று திரண்ட பொது மக்களினால், நீரில் மூழ்கிய தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கலாக மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற வெல்லாவய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மூவரின் சடலங்களையும் வெல்லாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி பதுறியா வீதியைச் சேர்ந்த இளம் வர்த்தகரான எம்.சி. நியாஸ் (40) அவரது மகன் எம்.என். சஹீட் (15) மகள் எம்.என். சைமா (11) ஆகிய மூவருமே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என தெரிய வருகின்றது.

இச்சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே நேரம் இச்சம்பவத்தையடுத்து சகல வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டு மேற்படி வர்த்தகரின் இழப்புக்கு தங்களது அனுதாபத்தை தெரிவிக்குமாறு காத்தான்குடி வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை மரணமடைந்த மாணவர்கள் தொடர்பில், காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய அதிபர் S.I. யஸீர் அரபாத் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ்.எம். நூர்தீன்)

Wed, 10/20/2021 - 22:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை