ஆசிரியர்கள் 21ஆம் திகதி தவறாது பாடசாலைக்கு சமூகமளிக்கவும்

தயவாக கேட்டுக் கொள்வதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

 

மாணவர்களுக்கான கல்வியை வீணடிக்காமல் சகல ஆசிரியர்கள், அதிபர்களும் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு தவறாது சமுகமளிக்குமாறு தயவாகக் கேட்டுக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்துள்ள அவர்; ஜனாதிபதி, பிரதமர் கல்வியமைச்சர் மற்றும் அமைச்சரவை அதற்கான அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கு யதார்த்தமான தீர்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொது ஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டிலுள்ள 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் மற்றும் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட உள்ளன.

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை வீணடிக்காமல் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் தயவான வேண்டுகோளை விடுக்கின்றோம்.முழு நாட்டினதும் எதிர்பார்ப்பும் இதுவாகும்.

நாட்டிலுள்ள 3800 பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில் 3 இலட்சம் மாணவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை பாடசாலைக்கு சமுகமளிக்கவுள்ளனர். எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் முதல் தடவையாக (தரம் 01க்கு ) பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இந்தப் பிரச்சனை 24 வருடங்களாக உள்ள பிரச்சனையாகும். டி.சி பெரேரா அறிக்கை 1995 ஆம் ஆண்டு வெளியாகியது. அன்று முதல் தொடர்கின்ற இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை