பாராளுமன்றம் ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் கூடும்

பாராளுமன்றம் ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் கூடும்-Parliament Convenes

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய பாராளுமன்றம் இத்தினங்களில் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒக்டோபர் 21ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள், இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன் பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய உர பயன்பாடு தொடர்பில் தற்போதைய பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கமைய 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

அத்துடன், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவினால் நிலையியற் கட்டளை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் அறிந்துகொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இது பற்றிக் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 10/13/2021 - 15:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை